உள்ளூர் செய்திகள்

வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்றவர் கைது- 20 லிட்டர் சாராயம் பறிமுதல்

Published On 2025-01-07 11:26 IST   |   Update On 2025-01-07 11:26:00 IST
  • தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது.
  • கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது.

கூடலூர்:

கூடலூர் அருகே ஒரு வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்குட்டு வேலவன் தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு வீட்டில் இருந்து அதிக நபர்கள் வந்த வண்ணம் இருந்ததால் 2வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது 55) என்பவரது வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர்.

அப்போது ராஜா தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜாவை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக குடத்தில் வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடலூர் அருகில் உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

தற்போது மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது. இதனிடையே சாராயம் விற்பனையும் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News