உள்ளூர் செய்திகள்

பச்சை பாசி வளர்ந்துள்ள வயல்.

குறுவை நெல் வயலில் பச்சை பாசி வளர்வதை கட்டுப்படுத்துவது எப்படி?

Published On 2023-08-10 10:41 GMT   |   Update On 2023-08-10 10:41 GMT
  • தஞ்சாவூர் வட்டாரத்தில் சுமார் 26000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாக மாறும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தஞ்சாவூர் வட்டாரத்தில் சுமார் 26000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தூர்கட்டும் பருவத்தில் உள்ளது. தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் சாகுபடி செய்துள்ள குறுவை நெல் வயலில் பச்சைப் பாசி வளர்ந்து காணப்படுகிறது.

இது பின்னர் பழுப்பு நிறமாகவும், கருப்பு நிறமாகவும் மாறி வேர்ப்பகுதியில் காற்றோட்டத்தையும் சூரிய வெளிச்சத்தையும் தடுத்து கட்டுப்படுத்தும்.

இதனால் வேரின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு சத்துக்களை எடுக்க இயலாத நிலை ஏற்படும். நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாக மாறும்.

தீவிர பாதிப்பு நிலையில் பயிர்கள் காயத் துவங்கும். களர் உவர் தன்மை அதிகம் கொண்ட நிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக காணப்படும்.

இதனைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ மயில்துத்தத்தை (காப்பர் சல்பேட்) நான்கு தூளாக்கி 10 கிலோ மணலுடன் கலந்து கோணிப் பையில் இட்டு கட்டி, பாசன வாய்க்கால் வாய் மடையில் வைத்து, தண்ணீர் கோணிப்பையில் பட்டு, கரைந்து வயலுக்குள் செல்லுமாறு செய்ய வேண்டும்.

மேலும், இரண்டு நாள் கழித்து நீரை வடித்து, அதனைத் தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

குறுவை அறுவடை முடிந்தவுடன் தாளடி சாகுபடிக்கு முன்பு சணப்பு, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழுவதன் மூலம் களர் உவர் தன்மையை, மாற்றி சமநிலையை ஏற்படுத்துவதால் பச்சைப்பாசியின் தாக்குதலை நன்கு கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News