உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.3.99 கோடி கடன் உதவிகள்- கலெக்டர் சாந்தி வழங்கினார்

Published On 2022-09-18 14:23 IST   |   Update On 2022-09-18 14:23:00 IST
  • மகளிர் ஒன்றுகூடி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் செய்யக்கூடிய வேலைகளை தருமபுரி மாவட்டத்திலேயே பெற்று அவ்வேலைகளை செய்தால், செலவுகள் குறையும். அலைச்சல் மிச்சமாகும்.
  • சுயதொழில் தொடங்க இளைஞர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சுயவேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வை யிட்டார்கள். இக்கண்காட்சியில் பல்வேறு தொழில்சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர்.

பின்னர் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கின்ற நிலையை நாம் அறிகின்றோம். ஆனால் அதே மகளிர் ஒன்றுகூடி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் செய்யக்கூடிய வேலைகளை தருமபுரி மாவட்டத்திலேயே பெற்று அவ்வேலைகளை செய்தால், செலவுகள் குறையும். அலைச்சல் மிச்சமாகும்.

தங்கள் குடும்பத்திலேயே இருந்து இந்த வேலைகளை பார்ப்பதால் அக்குடும்பமும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சிறந்த வளர்ச்சியை பெறும். அதனால் அதிக வருமானம் கிடைக்கும். இதனால் உங்கள் அருகாமையில் உள்ள பலருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி தருகின்ற நல்ல வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கின்றது. இப்படி பல பெண்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற தொழில்களை செய்தால் தங்கள் குடும்பமும், தங்களை சார்ந்தவர்களும் வளர்ச்சி அடைவார்கள். அப்படிப்பட்ட தொழில்களினால் அந்த பகுதியும் வளர்ச்சி அடையும், தருமபுரி மாவட்டமும் தொழில் வளர்ச்சி அடையும்.

எனவே, தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்த முன்னேற்றமடைய இளைஞர்கள், புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், உதவிகள், மானியங்களை பெற்று சுயதொழில் தொடங்க இளைஞர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். இளைஞர்கள், புதிய தொழில்முனைவோர்கள் அனைவரும் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சியுடன் தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் இருந்தால் சிறந்த தொழில் முனைவோர்களாக தங்களை உருவாக்கி கொள்ளலாம். தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக உருவாகிட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவத்தார்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 9 தொழில் முனைவோர்களுக்கு ரூ.86.99 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.3.99 கோடி பல்வேறு வகையான கடன் உதவிகளை வழங்கினார்.

Tags:    

Similar News