பைக்கில் மண்டை ஓடு உருவம்- திருக்குறள் ஒப்புவிக்க கூறி வாலிபருக்கு நூதன தண்டனை
- சித்தார்த் தனது பைக்கை திரும்ப பெற திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
- போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அடுத்த வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் (வயது19). இவர் தனது பைக்கை புதிய ரகத்தில் வடிவமைப்பு செய்து திருப்பத்தூர் டவுன் பகுதியில் வண்டியை ஓட்டி வந்தார்.
பைக்கின் நிறத்தை மாற்றி, புதிய தோற்றத்தை உருவாக்கியதோடு முகப்பு விளக்கு மற்றும் வாகன எண்ணில் (நம்பர் பிளேட்) மண்டை ஓடு இருப்பது போல புதிய உருவ தோற்றத்தை உருவாக்கி இருந்தார். இந்த பைக்கின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சித்தார்த் தனது பைக்கை திரும்ப பெற திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சிறுவனுக்கு, திருக்குறளை எழுத்துப்பிழை இல்லாமல் கூறிவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு நூதன தண்டனை கொடுத்தார். அதன்படி சித்தார்த் திருக்குறளை போலீசாரிடம் ஒப்புவித்தார்.
பின்னர் போலீசார் சிறுவனை, இனிமேல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டியை ஓட்டக்கூடாது. இது போன்ற வடிவமைப்புகளில் வாகனங்களை மாற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பினர்.