பெண் ஊராட்சி தலைவர்கள் முழு சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
- 95 ஊராட்சிகளில் 54 கிராம ஊராட்சிகளில் பெண் தலைவர்கள் இருப்பது மிகவும் பெருமைக்குரியது
- 2016-ன்படி தமிழ்நாட்டில் ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு
நாகர்கோவில் :
குமரி மாவட்ட ஊராட்சித் துறையின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பெண் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
குமரி மாவட்டத்திற்குட்பட்ட 95 ஊராட்சிகளில் 54 கிராம ஊராட்சிகளில் பெண் தலைவர்கள் இருப்பது மிகவும் பெருமைக்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 73-வது திருத்தத்தின்படி பெண்கள் சுயமாக முடிவெடுத்தல், சமூக நடவடிக்கைகளில் பங்கெடுத்தல், சமுதாயத்தில் நலிவுற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு இன்றியமையதாகக் கருதப்பட்டு, ஊராட்சி அமைப்புகளில் மூன்றில் 1 பங்கு பதவியிடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச் சட்டம் 2016-ன்படி தமிழ்நாட்டில் ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது கிராம ஊராட்சியே ஆகும். கிராம ஊராட்சியில் பெண்கள் ஆண்களுக்கு, நிகராக சுய முடிவெடுத்து தங்களது நிர்வாகத்திறனில் முத்திரை பதிக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சித்தலைவர்கள் எந்த ஒரு தனிநபர்களின் தலையீடும் இன்றி முழு சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலெக்டர் ஸ்ரீதர் 9 வட் டார வளர்ச்சி அலுவலகங்களுக்குட்பட்ட பெண் கிராம ஊராட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கான வீட் டுவரி 2022-23 முழுமையாக வசூல் செய்த ஊராட்சி கள் குறித்தும், வணிக நிறு வனங்களுக்கான சொத்து வரி (வீட்டுவரி), சுயநிதிக் கல்வி நிறுவனங்களுக்கான சொத்து வரி, தண்ணீர் கட்டணம், தொழில்வரி முழுமையாக வசூல் செய்யப்பட்ட கிராம ஊராட்சிகள் குறித்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம ஊராட்சி தலைவர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும், புதிய கட்டடங்களுக்கான மின் இணைப்பு வழங்குதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பின் அவ்விபரம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
10 ஆயிரம் சதுர அடி வரை பரப்பளவுள்ள 8 வசிப்பிடம் கொண்ட கட்டடங்களுக்கு (உயரம் 12 மீட்டர் வரை சில்ட் மற்றும் 3 தளங்கள் அல்லது தரைதளம் மற்றும் 2 தளங்கள்) ஊராட்சித் தலைவரால் கட்டிட வரை பட அனுமதி வழங்கலாம். வணிக நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் சதுர அடிவரை ஊராட்சித் தலைவரால் கட்ட அனுமதி வழங்குவது குறித்தும், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்ட பணிகளையும் கண்காணித்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.