உள்ளூரிலே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர் - அமைச்சர் கே.என்.நேரு
- யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
திருச்சி:
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மற்றும் கட்சியின் சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் மேடையேறியுள்ளார் நடிகர் விஜய். பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பணியாற்றி விட்டு தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார்.
யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனெனில் பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்.
தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.