கிருஷ்ணாபுரம் ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
- சீமை கருவேலம் மரங்கள் மீண்டும் அடர்ந்தும், படர்ந்தும் காணப்படுகிறது.
- பொதுமக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கிருஷ்ணாபுரம்,
மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் தேங்கி நிற்கும் வகையில் நீர்நிலைகளான ஏரிகள், குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவற்றை அரசு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அருகிலுள்ள அணைகள், ஆறுகள் ஆகியவற்றின் வலது மற்றும் இடது புற வாய்க்கால்கள் மூலமும் நீர் நிலைகளுக்கு சில பகுதிகளில் தண்ணீர் விடும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நீர் நிலைகளில் உள்ள நீர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். இதனால் அந்தந்த நீர் நிலைகளில் சுற்றி உள்ள விவசாய நிலங்களும் அருகில் உள்ள கிராமங்களும் விவசாய பணிகளுக்கும், குடிநீருக்கும் போதிய அளவில் தண்ணீர் கிடைத்து வரும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேறி வருகின்ற சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் நீர் நிலைகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் உள்ளதால் நீர் நிலையில் உள்ள நீரினை சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் உறிந்து கொள்கிறது.
இதனால் நீர்நிலைகள் உள்ள நீர்கள் மிக வேகமாக குறைந்து விடும் சூழல் உள்ளதால் நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நீர் நிலைகளில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. பல நீர்நிலைகளில் அகற்ற படாமலேயே உள்ளது.
குறிப்பாக கிருஷ்ணாபுரத்தில் 141 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரிக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுதான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த பெரிய ஏரியில் சீமை கருவேல மரங்களும் கருவேல மரங்களும் அடர்ந்து காணப்படுவதால் ஏரியில் உள்ள தண்ணீர் வெகுவாக உறிஞ்சி உள்ளதால் கிருஷ்ணாபுரம் பெரிய ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றிய நீர்நிலைகளிலும் அதை முறையாக பராமரிக்காத காரணத்தால் மீண்டும் சீமை கருவேலம் மரங்கள் மீண்டும் அடர்ந்தும், படர்ந்தும் காணப்படுகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதால் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.