- மதுரையில் திருடு போன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.
- போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்.
மதுரை
மதுரையில் செல்போன் திருட்டு தொடர்கதையாக நடந்து வருகிறது. இதன் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), அரவிந்த் (வடக்கு), கவுதம் கோயல் (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பயனாக திருடுபோன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.
தல்லாகுளம் சரகத்தில் மட்டும் 106 செல்போன்களும், அண்ணாநகரில் 64 செல்போன்களும், திடீர் நகரில் 42 செல்போன்களும் மீட்கப்பட்டது. இதே போன்று செல்லூர்-17, மீனாட்சி அம்மன் கோவில் சரகம்-13, அவனியாபுரம்-9, திருப்பரங்குன்றம்-4, தெற்கு வாசல்-6 செல்போன்களும் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.