அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- மதுரையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட் பட்ட விளாங்குடி 1-வது வார்டு பொற்றாமரை நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அந்தப்பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை.
மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கண்டித்தும், பொற்றாமரை நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டுமென வலியு றுத்தியும் இன்று காலை அந்தப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு விட சென்ற பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் செய்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் வார்டு செயற்பொறியாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.