தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம்
- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கு, மாலையில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
முக்கிய நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் இன்று மாலை கோவிலில் உள்ள ஆறு கால் மண்டபத்தில் நடக்கிறது. இதையொட்டி சுப்பிரமணியர்- தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர்- தெய்வானையுடன் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு வேத மந்திரங்கள் முழங்க சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மீனாட்சி சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியர்- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.