மாலைமலர் செய்தி எதிரொலி - பல்லடம் பஸ் நிலையத்தில் ஆபத்தான கட்டிடம் இடிப்பு
- கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது.
- பல்லடம் பஸ் நிலையத்தில் இருந்த ஆபத்தான கட்டடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்தக் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது.
இந்த நிலையில் பழுதடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுமாறும், அல்லது பல்லடம் நகராட்சி இடத்தை ஒப்படைக்க வேண்டும் என பலமுறை தாட்கோ நிர்வாகத்திற்கு நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் இன்னும் அவர்கள் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இது குறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனைப்பார்த்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் இருந்த ஆபத்தான கட்டடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.