மேகதாது அணை விவகாரம்:தமிழக விவசாயிகள் சங்கம் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
- தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
- விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர், இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக தர உத்தரவிட்டும் தற்போது வரை கர்நாடக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வேண்டும்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு குறியாக உள்ளது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 17-ந் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழ்துளை மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள், உரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் .
தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய முழு பரப்பளவிற்கும் திட்டம் சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.