பூண்டி நீர் தேக்கத்தை பார்வையிட்ட போது...
நீர்நிலைகளில் வீடுகள் கட்ட வேண்டாம் - அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்
- இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.
- நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.
திருவள்ளூர்:
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2960 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.
மேலும் நீர்வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் 10 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனை அடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர்வரத்து குறித்தும், உபரி நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர். அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது. இதனால் உபரி நீரை வெளியேற்றி வருகிறோம். சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்வர். பூண்டி ஏரி கரையை ஒரு அடி உயர்த்தும் திட்டம் உள்ளது.
ஒரு காலத்தில் பூண்டி ஏரி அழகாக இருந்தது, தற்போது இல்லை; இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.
அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராசன், நீர்வளத்துறை துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்யநாராயணா, செயற்பொறியாளரின் நேர்முக உதவியாளர் ஜி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.