உள்ளூர் செய்திகள்

புதுப்பாளையம் இணைப்புச்சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர். 

சாலையில் ஓடும் சாக்கடைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-02-17 12:52 IST   |   Update On 2023-02-17 12:52:00 IST
  • புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் சதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.
  • இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாழப்பாடி:

சேலம்– உளுந்துார்பேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில், வாழப்பாடி பேரூராட்சிக்கு முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ., துாரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

இச்சாலையில் இருந்து, போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த வாழப்பாடி– தம்மம்பட்டி சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளையும் இணைக்கும் வகையில், சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன பங்களிப்புடன் தன்னிறைவு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகரில் இருந்து புதுப்பாளையம் வரை, புறவழிச்சாலையின் இருபுறமும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது.

தம்மம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் இச்சாலை வழியாகவே சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன. இதுமட்டுமின்றி, சிங்கிபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்களும், வாழப்பாடி நகர்ப்புற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் அனைத்து ரக வானங்களும் இந்த இணைப்புச் சாலையிலேயே சென்று வருகின்றன.

இந்நிலையில், புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் வசதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.

இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி இப்பகுதியில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன. எனவே, பழுதடைந்து கிடக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News