உள்ளூர் செய்திகள்

விவசாய நிலம் வாங்க ரூ. 5 லட்சம் மானியம்- 100 சதவீதம் முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் விலக்கு

Published On 2023-11-29 07:43 GMT   |   Update On 2023-11-29 07:43 GMT
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத்தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெறலாம்.
  • இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத்தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெறலாம்.

முத்திரைத்தாள்

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

விண்ணப்பங்கள்

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 சதவீதம் மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News