உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் முதியவர்

Published On 2023-04-21 07:23 IST   |   Update On 2023-04-21 07:23:00 IST
  • துவாரகா புண்ணிய ஸ்தலத்தில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
  • 5 ஆயிரம் கிலோமீட்டருக்கு தனது சைக்கிள் பயணம் அமைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாமல்லபுரம் :

குஜராத் மாநிலம் ராஜகோட் நகரை சோந்தவர் ரசீக்போலா (வயது 64). செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த இவர், இறந்த தனது தாய், தந்தையை தெய்வமாக வணங்கி வருபவர். தனது பெற்றோரின் நினைவாக இந்தியா முழுவதும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 திசைகளில் உள்ள அதாவது, கிழக்கில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவில் (ஒடிசா), மேற்கில் உள்ள துவாரகா கோவில் (குஜராத்), வடக்கில் உள்ள பத்திரிநாத் சிவன் கோவில் (உத்தரகாண்ட்), தெற்கில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சைக்கிளில் ஆன்மிக யாத்திரை செல்ல முடிவு எடுத்தார். இவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மேற்கு கடற்கரையில் உள்ள குஜராத் மாநிலம், துவாரகா புண்ணிய ஸ்தலத்தில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

அங்கிருந்து பல மாநிலங்கள் வழியாக கிழக்கு கடற்கரையில் உள்ள ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று விட்டு, தெற்கு திசையில் உள்ள ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்வதற்காக தமிழகம் வந்த ரசீக்போலா நேற்று மாமல்லபுரம் வந்தார். பல மாநிலங்கள் வழியாக வந்த அவர் வழியில் உள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களையும் சைக்கிள் பயணம் மூலமாகவே பார்த்து வருகிறார்.

முடிவில் தனது சைக்கிள் பயணத்தை பத்ரிநாத்தில் நிறைவு செய்கிறார். சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டருக்கு தனது சைக்கிள் பயணம் அமைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் இந்த சூழலில் தனது உடலில் வெயில் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மூங்கில் கூடையை தலையில் தொப்பியாக மாட்டிக்கொண்டு வயது 64 என்றாலும் ஒரு 18 வயது இளைஞரை போல் ரசீக்போலா சைக்கிள் பயணம் செய்தார்.

Similar News