உள்ளூர் செய்திகள்

கண்களை திறந்து மூடி, காதுகளை அசைத்து பொதுமக்களை வியக்கவைக்கும் வித்தியாசமான விநாயகர் சிலை ஓசூரில் ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்

Published On 2022-09-01 15:29 IST   |   Update On 2022-09-01 15:29:00 IST
  • வித்தியாசமான அரங்கு அமைக்கப்பட்டு இந்தபிரம்மாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது.
  • இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் சிலை முன்பு நின்று செல்வி எடுத்து மகிழ்ந்தனர்.

ஓசூர்,

விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவிற்கு பெயர் போன ஓசூரிலும் சதுர்த்தி விழா, களைகட்டியது. பண்டிகையையொட்டி, நகரில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.

ஓசூர் ஜனப்பர் தெருவில் ஜே.சி.சி குரூப் நண்பர்கள் சார்பில். சினிமாசெட் போன்று வடிவமைக்கப்பட்டு சிவதாண்டவத்துடன் கூடிய விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு தரிசிக்க வரும் பெண்களுக்கு துளசி செடிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவராஜ் தலைமையில் கிரண்குமார், பாபு மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

ஓசூர் ராம் நகர் அண்ணாசிலையருகில், ஸ்ரீபால் விநாயகா பூஜா மண்டலி சார்பில், 41-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 15 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஓசூர் நேதாஜி ரோடில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 15 அடி உயர பிரமாண்ட சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அமைப்பின் கோட்ட செயலாளர் நரசிம்மன் தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஓசூர்- பாகலூர் ரோடு ஜி.ஆர்.டி சர்க்கிள் அருகே திறந்தவெளி மைதானத்தில், சிவசேனா கட்சி சார்பில், "பாலபூர் கணேசா" என்ற வித்தியாசமான 15 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

வித்தியாசமான அரங்கு அமைக்கப்பட்டு இந்தபிரம்மாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை, பொதுமக்கள் நீண்ட வரிசையில் சென்று,வியப்புடன் பார்த்து தரிசித்து செல்கின்றனர். மேலும், இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் சிலை முன்பு நின்று செல்வி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வித்தியாசமான சிலை குறித்து, சிவசேனா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்

ஓசூர் முரளி மோகன், நிருபர்களிடம் கூறியதாவது: -வட இந்தியாவில் மிகவும் பிரபலமான "பாலபூர் கணேசா" என்ற இந்த வித்தியாசமான சிலை, தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக, ஓசூரில்தான் வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர், காதுகளை அசைத்தவாறும், கண்களை திறந்து மூடுவது போன்றும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இந்த சிலையின் மதிப்பு மூன்றரை லட்ச ரூபாய் ஆகும். அரங்கின் முன் பகுதியில், ஒரு புறம் சத்ரபதி சிவாஜி, மறுபுறம் பால் தாக்கரே சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. நடுவில் நீர் வீழ்ச்சி போன்று ''செட்" அமைக்கப்பட்டுள்ளது.உள்ளே, பாலபூர் கணேசாவை பொதுமக்கள் தரிசித்து செல்ல விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News