வருசநாடு அருகே கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணிகளால் பொதுமக்கள் அவதி
- முருக்கோடை கிராமத்தில் இருந்து வாழவந்தாள்புரம் வரையிலான சுமார் 3 கிமீ தொலைவிலான தார் சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
- புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே முருக்கோடை கிராமத்தில் இருந்து வாழவந்தாள்புரம் வரையிலான சுமார் 3 கிமீ தொலைவிலான தார் சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருக்கோடை-வாழவந்தாள்புரம் இடையே புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக பழைய தார் சாலை தோண்டி அகற்றப்பட்டது. அதன் பின்னர் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.
இதனால் வாழவந்தாள்புரம் கிராமத்திற்கு ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியவில்லை. எனவே வெளியூர் செல்லும் பொதுமக்கள் பஸ்சிற்காக முருக்கோடை வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த சாலை காரணமாக சிலிண்டர் வாகனங்கள் முருக்கோடை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
எனவே வாழவந்தாள்புரம் கிராம பொதுமக்கள் சிலிண்டர்களை வாங்கி அதனை தலைச்சுமையாக 3 கிமீ எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு முருக்கோடை-வாழவந்தாள்புரம் இடையே புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.