பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 502 வழக்குகளுக்கு தீர்வு
- பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 502 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- இதனை மாவட்ட தலைமை நீதிபதி பல்கிஸ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோர்ட் வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதனை மாவட்ட தலைமை நீதிபதி பல்கிஸ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.இதில் குடும்ப நல கோர்ட்டு மாவட்ட நீதிபதி தனசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி மூர்த்தி, மாவட்ட உரிமையியல் கோர்ட்மு நீதிபதி ராஜமகேஷ்வர், குற்றவியல் கோர்ட்மு நீதிபதிகள் சுப்புலட்சுமி, சங்கீதா ஆகியோர் கொண்ட 4 அமர்வானது கோர்ட்டுகளில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடந்தியது.
இதில் வங்கி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 502 வழக்குகள் ரூ.ஒரு கோடியே 60 லட்சத்து 10 ஆயிரத்து 300 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல்சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, வழக்கறிஞர்கள் அசோசியேஷன் சங்க தலைவர் மணிவண்ணன், வக்கீல்கள் சங்கர், அருணன், திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் செய்திருந்தனர்.