குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் போராட்டம்: பா.ஜ.க. நிர்வாகிகள் 300 பேர் மீது வழக்கு
- டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நாகர்கோவில்:
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் தலைவர் கணேசன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், மேற்கு மாநகர தலைவர் சதீஷ் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கோபகுமார், முத்துராமன், கணேசன், சதீஷ், மீனாதேவ் உள்பட 160 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 140 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.