உள்ளூர் செய்திகள்
3-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம்: கோவை, திருப்பூரில் காடா துணிகள் தேக்கம்

3-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம்: கோவை, திருப்பூரில் காடா துணிகள் தேக்கம்

Published On 2025-03-21 10:53 IST   |   Update On 2025-03-21 10:53:00 IST
  • கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு.
  • உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம்

நீலாம்பூர்:

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விசைத்தறி கூடங்கள் அனைத்து மூடப்பட்டு அந்த பகுதியே தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடியது. கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று 3-வது நாளாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News