வசிஷ்டநதியில் குதித்து மாயமான கர்ப்பிணி பெண் 7 நாட்களுக்கு பின் பிணமாக மீட்பு
- உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமு(27). இவரது மனைவி மோகனாம்பாள் (19). இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் இடையே கடந்த 1-ந் தேதி இரவு தகராறு ஏற்பட்டது.
இதில் மனமடைந்த மோகனாம்பாள், பேளூர் அருகே வேட்டைக்காரனூர் பாலத்தில் இருந்து வசிஷ்டநதியில் குதித்தார். இவரை தொடர்ந்து அவரது கணவர் ராமுவும் வஷிஷ்டநதியில் குதித்தார். இதுகுறித்து தகவலறிந்த அந்த பகுதி மக்கள் நள்ளிரவு நேரத்தில் ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.
ஆற்றில் குதித்த கர்ப்பிணிப் பெண் மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை தொடர்ந்து 4 நாட்கள் தேடியும், ஆற்றில் வெள்ளம் குறையாததால் மோகனாம்பாளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணியை தீயணைப்பு துறையினர் நிறுத்திக் கொண்டனர்.
இன்று அதிகாலை வசிஷ்டநதியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், பேளூர் அடுத்த ராமநாதபுரத்தில் வசிஷ்ட நதியின் கரையில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட இப்பகுதி மக்கள், வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கரை ஒதுங்கிக் கிடந்த பெண் மோகனாம்பாள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது தாயார் மற்றும் உறவினர்களை வரவழைத்து உறுதிப்படுத்திய போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன், மோகனாம்பாளின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர். 7 நாட்களுக்கு முன் வசிஷ்ட நதியில் குதித்த கர்ப்பிணிப் பெண் இன்று அதிகாலை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.