(கோப்பு படம்)
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை- காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்
- இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் விழாவில் பங்கேற்கின்றனர்.
காந்தி கிராமம்:
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு பிரதமர் மதுரை வருகிறார். பின்னர் மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.
அதன்பின்னர் அங்கு இருந்து கார் மூலம் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் பிரதமர் விசாகப்பட்டினத்திற்கு செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் வருவதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகம் அமைந்துள்ள காந்திகிராமம், அம்பாத்துரை, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்மையநாயக்கனூர், திண்டுக்கல் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று காலை 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.