வத்தலக்குண்டு அருகே புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
- பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.
- சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு பைபாஸ் வழியே சேவுகம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து 4 வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொடைரோடு, நத்தம் பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டமும் நடத்தி வந்தனர்.
ஆனால் 4 வழிச்சாலைகள் அமைக்காமல் இருவழிச்சாலை மட்டும் முடிந்த நிலையில் சுங்கச்சாவடி இன்று காலை 10 மணிமுதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 7 இடங்களில் பணம் வசூலிப்பதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டன.
ஆனால் சுங்கச்சாவடி திறக்கும் முன்பு காலை 9 மணிக்கு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இதனால் நள்ளிரவு 12 மணிக்கே சுங்கச்சாவடி திறக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
அதிகாலையில் இத்தகவல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்து சுங்கச்சாவடி நோக்கி வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.
இதனை தடுக்க வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருசிலருக்கு மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லேப்டாப்களையும் அடித்து நொறுக்கியதுடன், மேலும் பல லேப்டாப்களை தூக்கிச் சென்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அலுவலர் சுமதி ஆகியோரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.
சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து கேட்டறிந்ததுடன் உள்ளூர் மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் 4 வழிச்சாலை பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல் சுங்கச்சாவடியை திறக்க கூடாது. உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இருந்தபோதும் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்பட்ட சுங்கச்சாவடி முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டதால் தற்போது வாகனங்கள் வழக்கம்போல் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டன.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிரா உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.