உள்ளூர் செய்திகள்

பருவம் தவறிய மழைப் பொழிவால் பாதிப்படைந்த விவசாய நிலங்கள் கணக்கெடுக்கும் பணி-புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2023-02-09 07:34 GMT   |   Update On 2023-02-09 07:34 GMT
  • பருவம் தவறிய மழைப் பொழிவால் பாதிப்படைந்த விவசாய நிலங்கள் கணக்கெடுக்கும் பணியினை புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
  • பாதிக்கப்பட்ட வயல்களில் தேங்கியுள்ள நீரினை வடிய வைத்து, நிலத்தினை காய வைத்து, அறுவடைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம், கூகனூர் கிராமத்தில், பருவம் தவறிய மழைப் பொழிவால் பாதிப்படைந்த நெல் வயல்வெளிகள் குறித்து, வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது; புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 1, 2 ஆகிய தேதிகளில் பெய்த பருவம் தவறிய மழையினால் அறுவடை நிலையிலிருந்த நெல் வயல்கள் பாதிக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 சதவீத நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 50 சதவீத நெல் வயல்களில் அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறுவடைப் பணிகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 50 சதவீத மானிய விலையில் நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் தேங்கியுள்ள நீரினை வடிய வைத்து, நிலத்தினை காய வைத்து, அறுவடைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் பாதிப்படைந்த வயல்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் பாதிப்படைந்த வயல்கள் குறித்து வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசின் அறிவுறுத்தலின்படி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் பாதிப்படைந்த விவசாயிகள் அனைவருக்கும் நிவாரண உதவி பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறுவகை பயிர், உளுந்து பயிர் சாகுபடி செய்தி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு பின்பு உளுந்து சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் சான்று பெற்ற விதைகள் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், உதவி இயக்குநர் (வேளாண்மை) பத்மபிரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags:    

Similar News