உள்ளூர் செய்திகள்

13 ஆண்டுகளாக சலுகைகள் இல்லாமல் வேளாண்துறையில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2025-01-26 12:21 IST   |   Update On 2025-01-26 12:21:00 IST
  • கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்நுட்ப மேலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசு மறுத்துவருகிறது.
  • பெண்களை அவர்களின் சொந்த மாவட்டத்திற்கே பணியிட மாற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் ஓர் அங்கமான வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர்களாகவும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களாகவும் பணியாற்றி வருபவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படாததுடன், அண்டை மாவட்டங்களுக்கு இடமாற்றம் கூட மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒப்பந்தப் பணியாளர்கள் என்றாலே அவர்களை கொத்தடிமைகளைப் போல அரசு நடத்துவது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் வேளாண்துறையில் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், வட்டார தொழில்நுட்ப மேலாளர்களும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களும் கடந்த 2012-ம் ஆண்டில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில் அவர்களுக்கு முறையே ரூ.20,000, ரூ.8,500 ஊதியமாக வழங்கப்பட்டது. அதன்பின் 13 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், ஒரே ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு அவர்களின் ஊதியம் முறையே ரூ.25,000, ரூ.15,0000 ஆக உயர்த்தப்பட்டதைத் தவிர அவர்களுக்கான எந்த உரிமையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதே பணியை செய்பவர்களுக்கு அசாம் மாநிலத்தில் முறையே ரூ.64,927, ரூ.37,821 ஊதியமாக வழங்கப்படும் நிலையில், அதில் பாதி கூட தமிழகத்தில் வழங்கப்படவில்லை.

பணி நிலைப்பு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மகப்பேறு காலங்களில் விடுப்புடன் கூடிய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்நுட்ப மேலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசு மறுத்துவருகிறது. இது மனிதநேயமற்ற செயலாகும். இது தான் தி.மு.க. அரசின் சமூக நீதியா?

வேளாண் துறை தொழில்நுட்ப மேலாளர்களின் உணர்வுகளை மதித்தும், அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும். ஒரு மாவட்டத்திலிருண்டு இன்னொரு மாவட்டத்திற்கு சென்று பண்ணியாற்றும் தொழில்நுட்ப மேலாளர்களை, குறிப்பாக பெண்களை அவர்களின் சொந்த மாவட்டத்திற்கே பணியிட மாற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News