9,685 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவில் கடந்த ஆண்டு முதலாமாண்டு படித்த 4 ஆயிரத்து 168 மாணவர்கள், 5 ஆயிரத்து 517 மாணவிகளுக்கு என மொத்தம் 9ஆயிரத்து 685 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 66 லட்சத்து 84 ஆயிரத்து 120 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.
இதில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் 16 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 2ஆயிரத்து 609 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 76 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ,முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி நன்றி கூறினார்.