புதிய கலெக்டர் அலுவலகத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி ஆய்வு
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகிறார்.
- வாலாஜா டோல்கேட்டில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை:
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு தமிழக அரசின் பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்திட தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டம் வருகை புரிகிறார். தமிழக முதல்அமைச்சருக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் இன்று மாலை 5.30மணிக்கு வாலாஜா டோல்கேட்டில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மேலும் 30ம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தும் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை புதிய கலெக்டர் அலுவலகத்தை பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், ஒப்பந்ததாரர் உள்பட பலர் உடனிருந்தனர்.