சாலாமேடு பகுதியில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் பீதி
- தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
- கடந்த 4 மாதங்களில் 7 கொள்ளை சம்பவம் நடை பெற்று உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் சாலாமேடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் லியோ கிங் (வயது 47).
இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
அருண் லியோ கிங் மனைவி ஜான் ஜாக்குலின். இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கிராமம் என்ற ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அருண் லியோ கிங் சகோதரருக்கு பெங்களூருவில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அவரை பார்ப்பதற்காக அருண் லியோ கிங் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த திங்கட்கிழமை பெங்களூருவிற்கு சென்றார்.
நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் பக்க கிரீல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 17 அரை பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து அருண் லியோ கிங் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். தகவலின் பேரில் விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர நாத் குப்தா, தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மன்னார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு. அது கொள்ளை நடைபெற்ற வீட்டை மோப்பம் பிடித்து 3 தெருக்கள் வழியாக சென்று போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நின்றது.
தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
விழுப்புரம் சாலா மேடு பகுதியில் கடந்த 4 மாதங்களில் 7 கொள்ளை சம்பவம் நடை பெற்று உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே புதியதாக பொறுப் பெற்றுள்ள போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடர் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.