ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், குறுக்கே சேலம் ஓமலூர் ரெயில்வே இருப்பு பாதை செல்கிறது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஓமலூர் நகரில் இருந்து முத்துநாயக்கன்பட்டி, சேலம், தாரமங்கலம், இரும்பாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், குறுக்கே சேலம் ஓமலூர் ரெயில்வே இருப்பு பாதை செல்கிறது. இங்கு அடிக்கடி ரெயில்வே கேட் போட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இங்கே தற்போது பாலம் கட்டி போக்குவரத்து சென்று வருகிறது.
இந்தநிலையில், கீழே உள்ள பகுதி மக்கள் சென்று வருவதற்கான சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், தற்போது சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நிலம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருவாய்துறை அதிகாரிகள், சாலை அமைக்கும் திட்ட அதிகாரிகள் இணைந்து, சாலைக்கான நிலத்தின் உரிமையாளர்களை அழைத்து பேசி ஒப்புதல் பெற்றனர். எடுக்கப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பிற்கு மேல் ஒரு மடங்கு சேர்த்து இழப்பீடு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு காலி நிலம், வீடுகள் எடுக்கப்படுகிறது. கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நிலத்தின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.