சென்றாய பெருமாள்- புஜங்கீஸ்வரர் கோவில் தேரோட்டம்
- பல நூறாண்டுகள் பழமையான, மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் புஜங்கீஸ்வரர் கோவிலும் உள்ளது.
- பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியில் பல நூறாண்டுகள் பழமையான, மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் புஜங்கீஸ்வரர் கோவிலும் உள்ளது.
பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதே போல புஜங்கீஸ்வரர் கோவிலிலும் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்யப்படுகிறது.
இந்த 2 கோவில்களும் சார்பாக தீபாவளி பண்டிகையின் போது திருவிழா நடத்தப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீதேவி, துளசியம்மாள் சமேத சென்றாய பெருமாளும், சிவகாமி உடனுறை புஜங்கீஸ்வரரும் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
பெருமாளும், சிவனும் அடுத்தடுத்த தேரில் நகர்வலம் வந்தனர். ராஜவீதியில் தொடங்கிய இந்த நகர் வலத்தில் ஒவ்வொரு வீடாக 2 சாமிகளுக்கும் தேங்காய் பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் நேர்த்திக் கடனாக பெண்கள், குழந்தைகள் தேரை இழுத்து வந்தனர்.
கடந்த காலங்களில் முறையாக நடத்தப்பட்டு வந்த திருவீதி உலா நிகழ்ச்சி கடந்த 19 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கோவில் நிர்வாகிகள் மற்றும் கட்டளைதாரர்களால் திருவீதி உலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.