தமிழக-கர்நாடக மதுவிலக்கு சோதனை சாவடியில் நடந்த மோதல் தொடர்பாக 3 போலீசார் சஸ்பெண்ட்
- பஸ் டிரைவருக்கும், போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.
- செந்தில், சுகவனேஸ்வரன் ஆகிய 2 போலீஸ் ஏட்டுகளும் காயம் அடைந்தனர்.
சேலம்:
தமிழக-கர்நாடக எல்லையான மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காடு பகுதியில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிலர் சொகுசு பஸ் ஒன்றில் தென் மாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா வந்தனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு ஆன்மிக தலங்களை பார்த்து விட்டு கர்நாடக மாநிலத்திற்கு செல்வதற்காக காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.
அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த மதுவிலக்கு போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரன், தமிழரசன் ஆகியோர் இந்த சொகுசு பஸ்சின் பெர்மிட் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பஸ் டிரைவருக்கும், போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் வண்டியில் இருந்த இரும்புகம்பியை எடுத்து போலீஸ் ஏட்டுகளை தாக்கினார். அவருக்கு ஆதரவாக பஸ்சில் இருந்த பயணிகளும் அங்கு வந்து சோதனை சாவடி போலீசாரை தாக்கினர். இதில் செந்தில், சுகவனேஸ்வரன் ஆகிய 2 போலீஸ் ஏட்டுகளும் காயம் அடைந்தனர்.
அதே நேரத்தில் அவர்களும் தங்களை தற்காத்து கொள்ள சுற்றுலா பயணிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்கு வந்த அந்த பகுதி மக்கள் சுற்றுலா பயணிகளில் சிலரை சோதனை சாவடியில் பிடித்து வைத்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலரை கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுற்றுலா பஸ் டிரைவரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த சிவநாராயணன் (52), கீளினர் அஜய் (20) ஆகியோர் மீது கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து டிரைவர் மற்றும் கீளீனர் ஆகியோர் ஜாமினீல் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த பேருந்து மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை சாவடியில் பணியாற்றிய போலீசார் செந்தில், சுகவனேஸ்வரன், தமிழரசன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து சேலம் மாவட்ட சூப்பிரண்டு கவுதம் கோயல் உத்திரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.