தென்காசியில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்டு வந்த ஆம்னி பஸ்கள் பறிமுதல்
- தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.
- சோதனையில், முறையான அனுமதி இல்லாமல் 2 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடை யநல்லூர், செங்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சென்னை, பெங்களூர்,கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.
இதில் எந்த ஆம்னி பஸ்களும் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் மணிபாரதி மற்றும் ராஜன்,உள்ளிட்டோர் தென்காசி குத்துக்கல்வலசை சாலையில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது நாகலாந்து மாநிலத்தின் பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை சோதனை செய்த பொழுது பயணிகளை ஏற்றி இறக்கம் செய்ய தமிழகத்தின் பெர்மிட் உள்ளிட்ட எந்த முறையான அனுமதியும் இல்லாமல் 2 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்வதற்குமட்டுமே அனுமதிபெறப்பட்டு அதனை ஆம்னி பஸ் இயக்கத்திற்கு பயன்படுத்தியது கண்டறி யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த 2 ஆம்னி பஸ்களையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினர்.மேலும் தகுதிச்சான்று இல்லாததால் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.