உள்ளூர் செய்திகள்

கொள்ளிடம் அருகே ருசிகரம்: தனது மகளோடு சேர்ந்து பொதுத்தேர்வு எழுதி சாலை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற தந்தை

Published On 2025-02-09 10:34 IST   |   Update On 2025-02-09 10:34:00 IST
  • மாரிமுத்து மயிலாடுதுறை உட்கோட்டத்தில் சாலை ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
  • சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 51). இவருக்கு சுபஸ்ரீதேவி, மோனிஷா என்ற இரண்டு பெண் பிள்ளைகளும் துளசேந்திரன், கலாநிதி ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

இவர் சீர்காழி நெடுஞ்சாலைத்துறையில் 1997 ஆம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்திருந்த நிலையில் சாலை பணியாளராக பணியில் சேர்ந்து பணி புரிந்து வந்தார். மேலும் பதவி உயர்வு பெறுவதற்காக கடந்த 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டு தனது மூத்த மகள் சுபஸ்ரீ தேவி அரசு பொதுத்தேர்வு எழுதும்போது, இவரும் அதே நேரத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தனித்தேர்வராக தேர்வு எழுதி விடாமுயற்சியால் தேர்ச்சியும் பெற்றார்.

சீர்காழியில் மகள்களோடு தந்தை தேர்வு எழுதியதை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

மாரிமுத்து நெடுஞ்சாலைத் துறையில் பதவி உயர்வு பெற வேண்டி தேர்வு எழுதிய நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்ட முதுநிலை பட்டியல் அடிப்படையிலும் கல்வித் தகுதி அடிப்படையிலும் தற்போது திறன்மிகு உதவியாளர் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போது மாரிமுத்து மயிலாடுதுறை உட்கோட்டத்தில் சாலை ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

9-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் மாரிமுத்து தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் அடுத்தடுத்து தேர்வு எழுதி வெற்றி பெற்று தனது பிள்ளைகளையும் பட்டதாரிகளாக ஆக்கி தானும் பதவி உயர்வு பெற்றுள்ளதை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News