உள்ளூர் செய்திகள்

அம்பத்தூர் பகுதியில் புழல் ஏரியில் திறந்து விடப்படும் கழிவுநீர்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2025-01-18 11:47 IST   |   Update On 2025-01-18 11:47:00 IST
  • குடிநீர் மிகவும் மாசடைந்து கருப்பு நிறமாக மாறி உள்ளது.
  • புழல் ஏரி நீர் முழுவதுமே சாக்கடை நீராக மாறிவிடும் அபாயம் உள்ளது.

அம்பத்தூர்:

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி தற்போது முழு அளவு நிரம்பியுள்ளது. இங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வாரியம் மூலம் வீடுகளுக்கு குழாய் மூலமும், லாரி மூலமும் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் புழல் ஏரியின் கரை பகுதியான அம்பத்தூர் கள்ளிக்குப்பம், தென்றல் நகர், மேற்கு பாலாஜி நகர், சக்தி நகர், சரஸ்வதி நகர், கிழக்கு பாலாஜி நகர், பானு நகர் 1 முதல் 25 அவென்யூ வரை உள்ள குடியிருப்பு பகுதிகள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் மழை நீர் கால்வாய் மூலம் கழிவுநீர் இணைப்பு இணைக்கப்பட்டு இந்த ஏரியில் திறந்து விடப்படுகின்றன.

இதனால் குடிநீர் மிகவும் மாசடைந்து கருப்பு நிறமாக மாறி உள்ளது.

அது மட்டும் இல்லாமல் அப்பகுதியே கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த மழை நீர் வடிகாலில் சுற்றியுள்ள 2000-க்கும் மேற்பட்ட வீடுகளின் கழிவுநீரை விடுகின்றனர். இந்த கழிவு நீரானது நேரடியாக சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் இந்த புழல் ஏரியில் கலக்கிறது.

இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் ஒருவித விஷப்பூச்சி அனைத்து வீடுகளிலும் லட்சக்கணக்கில் படை எடுக்கிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் நாங்கள் முறையிட்டால் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றும் வீடுகளை கணக்கெடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் இங்கு 2 பெரிய மின்விளக்குகளை வைத்து பூச்சிகள் அதில் உட்காரும் வகையில் ஏற்பாடு செய்து சென்று விட்டனர்.

இதே நிலை தொடர்ந்தால் புழல் ஏரி நீர் முழுவதுமே சாக்கடை நீராக மாறிவிடும் அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாமல் 2 ஆயிரம் வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பதால் நீரின் நிறம் கருப்பாக உள்ளது. புழல் ஏரியை சுற்றியுள்ள திருமுல்லைவாயல், செங்குன்றம், முருகாம்பேடு, ஓரகடம் என எங்கெல்லாம் கரைப்பகுதி வருகிறதோ அப்பகுதி முழுவதும் கழிவுநீர் ஏரிகளில் வெளியேற்றப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News