உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அருகில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரியப்பன் உள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன வாய்க்கால் ரூ.25 லட்சத்தில் தூர்வாரும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-10-02 14:53 IST   |   Update On 2022-10-02 14:53:00 IST
  • தாமிரபரணி ஆற்று பாசனத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் என நான்கு வாய்க்கால்கள் மூலமாக 53 குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
  • வடகால் பாசன வாய்க்கால் மூலம் 7 குளங்கள் தண்ணீர் வரத்து பெறுகின்றன. இந்த வடக்கு பிரதான கால்வாய் மூலம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தென்திருப்பேரை:

தாமிரபரணி ஆற்று பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் இரண்டு அணைக்கட்டுகளும், மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் என நான்கு வாய்க்கால்கள் மூலமாக 53 குளங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் இடது புறத்திலிருந்து வடகால் பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வடகால் பாசன வாய்க்காலின் மொத்த நீளம் 19.25 கி.மீ. ஆகும். வடகால் பாசன வாய்க்கால் மூலம் 7 குளங்கள் தண்ணீர் வரத்து பெறுகின்றன. இந்த வடக்கு பிரதான கால்வாய் மூலம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த வடகால் வாய்க்காலில் எல்.எஸ்.0 மீட்டர்முதல் 15 கிமீ வரை மண் திட்டுக்களும் காட்டுச்செடிகளும் அதிகளவில் காணப்படுவதால் தண்ணீர் செல்வது இடையூறாக இருந்து வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் பகுதி பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் வடகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்து தரவேண்டும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தமிழக அரசுக்கு வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தாமிரபரணி பாசன அமைப்பில் சிறப்பு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இதன்படி ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன வாய்க்கால் 25 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி தொடக்க விழா ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மங்களகுறிச்சியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தாமிரபரணி நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஏரல் தாசில்தார் கண்ணன், பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு தூர் வாரும் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் ஸ்ரீவைகுண்டம், வரதராஜபுரம், கீழ்பிடாகை கஸ்பா, மங்கலகுறிச்சி, சிறுத்தொண்டநல்லூர், கொட்டாரக்குறிச்சி, இருவப்பபுரம், ஆறுமுகமங்கலம், பழையகாயல், அகரம், மஞ்சள் நீர்க்காயல், கொற்கை, வாழவல்லான், சாயர்புரம், திருப்பணி செட்டிக்குளம், சேர்வைக்காரன்மடம், குலையன்கரிசல், அத்திமரப்பட்டி மற்றும் கோரம்பள்ளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், உதவி பொறியாளர் பாஸ்டிங் வினு, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் அலங்காரபாண்டியன், சிவகளை பிச்சையா, ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, நகர தலைவர் கருப்பசாமி, வட்டார செயலாளர் நிலமுடையான், வட்டார துணைத்தலைவர் அமச்சார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சொரிமுத்து, ஊடக பிரிவு பொறுப்பாளர் மரியராஜ், திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், மற்றும் நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News