உள்ளூர் செய்திகள்

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8-ம் வகுப்பு மாணவன்

Published On 2024-12-29 08:15 GMT   |   Update On 2024-12-29 08:16 GMT
  • வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
  • செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதற்கிடையே மருத்துவ மனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகளும், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் வெடி குண்டு மிரட்டலால் பீதியடைந்தனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை அறிந்ததும் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் காவல்துறை கட்டுப்பட்டறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு வைத்ததாக பேசி இணைப்பை துண்டித்தது தெரிய வந்தது.

மேலும் இந்த மாணவன் விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பத்தை சேர்ந்தவர் என்பதும், தனது உறவினர் வீடான கடலூர் முதுநகருக்கு வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மாணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News