
புதிய கண்காணிப்புக்குழு ஆய்வுக்கு எதிர்ப்பு: தமிழக விவசாயிகள் இன்று முற்றுகை போராட்டம்
- குழுவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 2 பேரை நீக்க வேண்டும்.
- 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்ட பேரணி.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய குழு களைக்கப்பட்டு தற்போது 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையமே முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக முல்லைப்பெரியாறு அணையின் தன்மை குறித்து நாளை (22-ந்தேதி) ஆய்வு செய்ய வருகின்றனர். இந்த நிலையில் குழுவில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த நீர் பாசனம், நிர்வாகத் தலைமை பொறியாளர் பிரியோஸ், நீர் வளத்துறை தலைமை செயலர் விஸ்வாஸ் ஆகிய 2 பேரையும் நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று பெரியாறு, வைகை பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி லோயர் கேம்ப்பில் இருந்து தமிழக எல்லையான குமுளியை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதனையடுத்து காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வரத் தொடங்கினர்.
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பால சிங்கம் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய வருகிறது.
மத்திய நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த அணை தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த குழுவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 2 பேரை நீக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கேரளாவைச் சேர்ந்த இவர்களால் அணையில் மேற்கொள்ளப்படும் எந்த பராமரிப்பு பணிகளுக்கும் அனுமதி கொடுக்க மாட்டார்கள்.
மேலும் பெரியாறு புலிகள் காப்பகம், கேரள நீர்வளத்துறை, கேரள காவல் துறை ஆகிய 3 துறைகள் இணைந்து தமிழக பொறியாளர்கள் அணையில் பணிகள் செய்ய அனுமதி கொடுப்பதில்லை.
இந்த அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்ட பேரணி நடத்தி வருகிறோம் என்றார்.
விவசாயிகள் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம், லோயர் கேம்ப், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.