ரூ.20,000 மதிப்பில் மடிக்கணினி - ரூ.2000 கோடி ஒதுக்கீடு : தங்கம் தென்னரசு
- ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார்.
- மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து, நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு நாளை (இன்று) பதில் அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கான மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் வழங்கப்படும். மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள தரமான மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.