அருப்புக்கோட்டை மில் தொழிலாளி வீட்டில் 17 பவுன் நகை-பணம் கொள்ளை
- வீடு திரும்பிய செந்தில்வேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- செந்தில்வேல் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
இவரது மனைவி ஞான சக்திகுமாரி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய செந்தில்வேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த கொள்ளையில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீப காலமாக அருப்புக்கோட்டை பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொள்ளையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.