கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்தது- 20 கிராம மக்கள் பாதிப்பு
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.
- பலத்த மழை காரணமாக தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்கிறது.
திருத்தணி:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏரி,குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுகொள்ளவை எட்டி உள்ளன.
பலத்த மழை காரணமாக தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பாயும் பாலாறு திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக திருவாலங்காடு அடுத்த குப்பம் கண்டிகையில் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் மூழ்கியது. ஏற்கனவே தண்ணீர் அதிக அளவு சென்றதால் கடந்த வாரம் தரைப்பாலம் சேதமடைந்து இருந்தது.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது இந்த தரைப்பாலம் உடைந்தது. இதனால் சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிப்பில் உள்ளனர். அவர்கள் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
சேதமடைந்த தரைப்பாலத்திற்கு பதிலாக அப்பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.