அரசு பஸ்சில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் 22 பவுன் நகை மாயம்
- வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது.
- மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (55), முன்னாள் கவுன்சிலரான இவர் தற்போது 39-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் மனைவி பரமேஸ்வரி 52 மற்றும் குடும்பத்துடன் கோவையில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றார். மாலையில் கோவையில் இருந்து அரசு பஸ்சில் சேலத்திற்கு வந்தனர். அப்போது 3 பைகளை எடுத்து வந்தனர்.
பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது 3 பைகளில் ஒரு பை மாயமாகி இருந்தது. அந்த பையில் துணியுடன் 20 பவுன் நகைகளும் இருந்தது. இதையடுத்து மனோகரன் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
அவர்கள் பஸ் டிரைவர் பூபதியை தொடர்பு கொண்டு பை குறித்து விசாரித்தனர். அவர் பஸ்சை சோதனை செய்து விட்டு பை எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் அந்த பை எங்கு வைத்து மாயமானது என்பது மர்மமாக உள்ளது. இதனால் பள்ளப்பட்டி போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.