உள்ளூர் செய்திகள் (District)

கூடங்குளத்தில் அணுமின் நிலைய அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

Published On 2022-09-18 05:43 GMT   |   Update On 2022-09-18 05:43 GMT
  • வெளிநபர்கள் யாரும் அனுமதியின்றி உள்ளே வர முடியாத அளவுக்கு அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது வழக்கம்.
  • பாதுகாப்பையும் மீறி மர்மநபர்கள் சாதுரியமாக வந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் அசோகன்(வயது 55). இவர் கூடங்குளம் அருகே செட்டிகுளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த 1-ந்தேதி அசோகன் கர்நாடகா மாநிலம் கைகா அணுமின் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கர்நாடகா மாநிலம் சென்றுவிட்டார்.

இந்தநிலையில் அதிகாரிகள் குடியிருக்கும் அந்த வளாகத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற மற்ற ஊழியர்கள் பார்த்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் செல்போனில் அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் விபரத்தை கேட்டபோது சுமார் 50 பவுன் தங்க நககைள் வைத்திருந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்கள் அந்த நகை முழுவதையும் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே அதே பகுதியில் உள்ள ராமன் என்ற அணுமின் நிலைய அதிகாரியின் வீட்டிலும் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநபர்கள் யாரும் அனுமதியின்றி உள்ளே வர முடியாத அளவுக்கு அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது வழக்கம். ஆனால் அந்த பாதுகாப்பையும் மீறி மர்மநபர்கள் சாதுரியமாக வந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News