கச்சத்தீவு அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது
- கடல் சீற்றத்தில் சிக்கி விசைப்படகு கடலில் மூழ்கியது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
- அவர்கள் தங்களது புகாரில், தாங்கள் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களும் விசைப்படகுடன் கடலுக்குள் மூழ்கி விட்டதாக கூறி உள்ளனர்.
ராமேசுவரம்:
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், 15-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
ராமேசுவரம் பகுதியில் 820-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 15-ந்தேதி முதல் சுழற்சி முறையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல் நேற்று ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 500 மீனவர்கள் மீன்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த பாதுவைராஜன் என்பவரது விசைப்படகில் சென்றிருந்த பிரகாஷ், எபிரோன், பாண்டி, டல்லஸ், முனியசாமி, எமரிட் ஆகிய 6 மீனவர்களும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்துள்ளது.
அப்போது அவர்களது படகு கடல் அலையில் சிக்கி நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்கியது. படகில் இருந்த பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதனை அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக அங்கு வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டனர். விசைப்படகு கவிழ்ந்து மீனவர்கள் தத்தளித்ததை சக மீனவர்கள் உடனடியாக பார்த்ததால், அந்த 6 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை சக மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
கடல் சீற்றத்தில் சிக்கி விசைப்படகு கடலில் மூழ்கியது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
அவர்கள் தங்களது புகாரில், தாங்கள் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களும் விசைப்படகுடன் கடலுக்குள் மூழ்கி விட்டதாக கூறி உள்ளனர்.