உள்ளூர் செய்திகள்

வால்பாறை அய்யர்பாடி எஸ்டேட் வனப்பகுதியில் தீ விபத்து - மரங்கள் சேதம்

Published On 2024-02-16 11:55 IST   |   Update On 2024-02-16 12:05:00 IST
  • தீவிபத்து குறித்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
  • நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைத்தனர்.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது அய்யர்பாடி எஸ்டேட். இந்த எஸ்டேட்டில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள 7-ம் நம்பர் குடியிருப்பு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட்டுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது.

இந்த வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு திடீரென கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்து. இதை பார்த்த பொதுமக்கள் வேகமாக ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொது மக்களும் உதவி செய்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில், வனத்தில் இருந்த செடிகள், கொடிகள், மரங்கள் என அனைத்தும் எரிந்து சேதமாகி விட்டன.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வன பகுதி வழியாக செல்லும் மக்கள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News