நீதிபதியின் நாக்கை அறுப்போம்- திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு
- தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி நாக்கை அறுப்போம் என பேசினார்.
திண்டுக்கல்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைகண்டித்து நாடு முழுவதும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் எஸ்.இ.எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி நாக்கை அறுப்போம் என பேசினார்.
ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜ.க சார்பில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து துரை மணிகண்டன் மீது ஒற்றுமை, ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசியது, உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நகர்வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.