தருமபுரி மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசுகள் வெடித்த 9 பேர் மீது வழக்கு
- இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி;
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடிக்க கால நிர்ணயம் வகுத்து உத்தரவிட்டது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஒதுக்கப்பட்டது.
அதனை மீறி தருமபுரி மாவட்டத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் தருமபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தருமபுரி பஸ் நிலையம், ஆறுமுக ஆச்சாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, தருமபுரி நான்கு ரோடு ஆகிய பகுதிகளில், பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் தொப்பூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோம்பை செல்லும் பாளையம்புதூர் ஜங்ஷன் செல்லும் வழியில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த ஒருவர் மீதும், மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மொரப்பூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு கடை வைத்து பட்டாசு விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் பாப்பாரப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகிலும், பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பென்னாகரம் கடைவீதி பகுதியிலும், ஏரியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏரியூர் நிப்பான் பெயிண்ட் கடை அருகிலும், நீதிமன்ற உத்தரவை மீறி நேரம் கடந்து பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.