செங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை- காதல் தோல்வியா? என போலீசார் விசாரணை
- செல்லத்துரை சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.
- கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள விஸ்வநாதபுரம் இ.கே.தேவர் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், செல்லத்துரை(வயது 28) என்ற மகனும் உள்ளனர்.
செல்லத்துரை சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று செல்லத்துரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். செல்லத்துரை ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரை காதலிக்கவில்லை என்றும், திருமணத்திற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு செல்லத்துரைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்லத்துரை நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஒருதலை காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.