உள்ளூர் செய்திகள்

களேபரமான கடலூர் மாநகராட்சி கூட்டம்- தி.மு.க. கவுன்சிலர்கள் இரு தரப்பாக சாலை மறியல்

Published On 2022-09-02 15:50 IST   |   Update On 2022-09-02 15:50:00 IST
  • கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று காலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
  • வார்டு பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பது இல்லை.

கடலூர்:

கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று காலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயல் பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார். மேலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்க உள்ளார். இதன் காரணமாக அனைத்தும் கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் இந்த திட்டம் செயல்படுவதற்கு என்னென்ன பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதனை தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் ஒரு சில தி.மு.க. கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மேலும் எங்கள் வார்டு பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பது இல்லை. மேலும் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் தகவல் தெரிவிப்பதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.

அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பு தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் மேயர் சுந்தரி ராஜா தலைமையிலான மாநகராட்சி சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது என குறுங்கிட்டு தெரிவித்தனர்.

அப்போது குறைகள் குறித்து தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், எங்கள் கேள்வி தொடர்பாக மேயர் மற்றும் அதிகாரிகள் பதில் கூற வேண்டும். அதற்கு மாறாக எங்கள் கேள்விக்கு எப்படி கவுன்சிலர்கள் பதில் கூற முடியும் என கூறினர். இதனால் இரு தரப்பினர் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் அவரவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் குறித்து பதில் அளிக்கப்படும். ஆகையால் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் மோதலாக மாறியது. அதனைத்தொடர்ந்து இருதரப்பு கவுன்சிலரும் பாரதி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தினர்.

Similar News