உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Published On 2024-01-31 06:36 GMT   |   Update On 2024-01-31 06:36 GMT
  • ஓட்டுநர், நடத்துனர் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம்.

ஈரோடு:

ஈரோடு காசிபாளையத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையைச் சேர்ந்த கோவை-சேலம் வழித்தட பேருந்தில் ஈரோட்டைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் வடிவேல் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாரான நிலையில் இருவரையும் மீண்டும் ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு பேருந்தை இயக்குமாறு கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதற்கு அவர்கள் உடல் நிலை மற்றும் வேலை நேரத்தை குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்ததையடுத்து கிளை மேலாளார் அவர்களை அவதூறாக பேசியதுடன், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துனர் வடிவேல் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து கிளை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட இருவரிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இருவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது அதிகாலை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம். எங்களின் தூக்கம் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் எங்கள் மீது அதிக பணிச் சுமையை சுமத்துவது விபத்துக்கே வழிவகுக்கும்.

இது நாங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. எங்களை நம்பி பேருந்தில் ஏறும் நூற்றுக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனவே, இத்தகைய போக்கை மாற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News